ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
புத்தாண்டு பிறக்க 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மது விருந்துடன் விதவிதமான உணவு வகைகளும் நட்சத்திர ஓட்டல்களில் பரிமாறப்பட உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டி இருக்கும் நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.
புத்தாண்டு பிறக்கும் 31-ந்தேதி நள்ளிரவில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு 'ஹேப்பி நியூ இயர்' என உற்சாகம் பொங்க கூச்சலிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள்.
இந்த கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
புத்தாண்டையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. நாளை மறுநாள் இரவு 10 மணியில் இருந்தே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர்.
இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்க கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனங்கள் இயக்குபவர் மீது நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, சென்னை மாநகர் முழுவதும் சுமார் 450 இடங்களில் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.