போலி கையொப்பம் மூலம் 500 கோடி மோசடி - கும்பகோணம் விவசாயிகளின் தொடர் போராட்டம்

நிலமே இல்லாத ஒரு மாற்றுத்திறனாளியின் பெயரில் போலி கையொப்பம் இட்டு 8 இலட்ச ரூபாய் பணம் வாங்கியிருக்கும் கொடுமையும் அரங்கேறியிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்

கும்பகோணம் அருகே விவசாயிகளின் பெயரில் போலி கையெழுத்திட்டு 500கோடி ரூபாய் முறைகேடு செய்து விட்டு எஸ்கேப்பான தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 170-வது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது. இந்த ஆலை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஆலை அரவைக்காக கரும்பு போட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் பணம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இந்த பணத்தை கேட்டு பல வருடங்களாக கரும்பு விவசாயிகள் போராடி வரும் சூழலில் விவசாயிகளின் பெயரில் அவர்களுக்கு தெரியாமலேயே கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து வங்கிகளிலும் போலி கையெழுத்திட்டு சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஆலை நிர்வாகம் கடனை வாங்கிக்கொண்டதோடு ஆலையை வேறொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது.

தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையுடன் தற்போது வங்கியில் வாங்காத கடனுக்கு கடனாளியாகிவிட்ட விரக்தியில் நடவடிக்கை எடுக்கக்கோரி கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 170-வது நாளாகியும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன், “புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளை பற்றி எந்த கவலையும் படாமல் கரும்பு பதிவு செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தங்களுக்கு ஆலை நிர்வாகம் தரவேண்டிய பாக்கி பணத்திற்காக போராடி வந்த அப்பாவி விவசாயிகள் இப்போது தாங்கள் வாங்காத பணத்திற்காகவும் கடனாளியாகி போராடி வருகின்றனர். நிலமே இல்லாத ஒரு மாற்றுத்திறனாளியின் பெயரில் 8 இலட்ச ரூபாய் போலி கையொப்பம் இட்டு பணம் வாங்கியிருக்கும் கொடுமையும் அரங்கேறியிருக்கிறது. இதுபோல் கிட்டத்தட்ட 4000 விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து போலீசில் புகார் கொடுத்தும் வெறும் மனு ரசீது மட்டுமே கொடுக்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். இது குறித்து கரும்பு விவசாயிகளை தமிழக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.” என்றார்.

இது குறித்து புதிய ஆலையின் நிர்வாக செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் முனுசாமியை தொடர்பு கொண்ட போது ‘’நோ ரெஸ்பான்ஸ்’தான் பதிலாக கிடைத்தது.

முதல்வர் ஸ்டாலினுடனான பேச்சுவார்த்தையில் என்ன முடிவு செய்யப்பட்டது? என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் காசிநாதனிடம் கேட்டோம். “முதல்வர் எங்கள் பிரச்னைகள் முழுவதையும் கேட்டதோடு இன்னும் ஒரு வார காலத்தில் நிலுவைத்தொகைகளை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்” என்றார். போலி கையெழுத்திட்டு விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கிய பிரச்னைக்கு என்ன தீர்வு என்று கேட்டபோது, ”அது தொடர்பாக ஆலை நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளோம். அந்த தீர்ப்பு வரும்வரை ஆலையை அவர்கள் இயக்கமுடியாது” என்றார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com