தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு ரயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க ஆந்திர மாநில சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தள்ளம்பள்ளி அருகே நாயுடுபேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து நெல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது காரில் 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் இருப்பதும், தங்கத்தை அவர்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தங்கத்தை கடத்தி வந்த 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. காருடன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த மாதம் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு கடத்தி வந்த 7.3 கிலோ தங்கக்கட்டிகள் ஆந்திராவில் பிடிபட்டது. தங்கம் கடத்தலை தடுக்க, தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.