கண்டெய்னர் லாரி மோதி பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் பலி
ஆம்பூரில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி குமாரமங்கலம் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் பிளாஸ்டிக் கதவு ஜன்னல்கள் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள்கள் ஜெயஸ்ரீ பிளஸ்-2 வகுப்பும், 2-வது மகள் வர்ஷா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் தினசரி பள்ளி வாகனம் மூலம் பள்ளி சென்று வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் பள்ளி வாகனத்தை தவற விட்டதால் தந்தை தண்டபாணி தனது பைக்கில் அவர்களை அழைத்து சென்றார். ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்ற கனரக கண்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை இடித்துக் கொண்டு தாறுமாறாக ஓடி தண்டபாணியின் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பைக்கில் பின்புறம் உட்கார்ந்திருந்த சகோதரிகள் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த தண்டபாணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.