ஆபாச பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியர் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டார். தற்போது அவர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி . இந்த பள்ளியில் 1 முதல் 12 - ஆம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11- ஆம் மற்றும் 12- ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர் மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இச்சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், இது குறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6- ஆம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு வாதம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.
ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.