பிங்க் நிறத்தில் வருகிறது மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்றப்பட்டு வருகிறது.
சென்னையில் முதல் முறையாக இன்று முதல் பிங்க் நிறத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளை போக்குவரத்து துறை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசால் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து தொடங்கப்பட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இருந்தும் சென்னையில் இயக்கப்படும் அனைத்து வகை மாநகர பேருந்துகளும் ஒரே வண்ணத்தில் இருப்பதால் எந்தந்த பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகள், எந்தந்த பேருந்துகள் கட்டண பேருந்துகள் என கண்டறிவதில் சில இடங்களில் குழப்பம் ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு எந்தெந்த பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகள் என்பதை கண்டறியும் வகையில் பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதற்கட்டமாக 60 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளும் இந்த பிங்க் நிறத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.