"நோய் மாடு, கன்றுக்குட்டிகளை வெட்டுறாங்க..."

பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள்... ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராடுகிறார்கள்.அதே தமிழகத்தில்தான் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன, மாடுகள்.

மனித குலத்தை அச்சுறுத்தி, லட்சக்கணக்கான மக்களை பலிகொண்ட கொரோனா இப்போதுதான் சற்றே ஓய்ந்திருக்கிறது. ஆனால் ஒழியவில்லை என்பது நினைவிருக்கட்டும். சீனாவில் வூஹான் மாகாண இறைச்சி சந்தையிலிருந்துதான் அந்த வைரஸ் கிளம்பியது என்பது உலகறிந்த உண்மை. அதன் பின்பு இந்தியா முழுவதும் இறைச்சி சந்தைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், திருச்சியிலோ நிலைமை தலைகீழ்.

இதுதொடர்பாக தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஓ.பி.சி. அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் குரு, "மாடுகளை வெட்டுவதே பாபம் என்று கருதுகிறோம். ஆனால், திருச்சியில் வெட்டவெளியில் வெட்டுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி. குறிப்பாக அரியமங்கலம் ஆயில் மில் போலீஸ் செக்போஸ்ட் ஏரியா, கூத்தப்பார். திருவெறும்பூர் சாந்தி தியேட்டர் பின்புறம், உய்யக்கொண்டான் கரை, செங்குளம் காலனி, பீமநகர் மார்சிங் பேட்டை, உறையூர் கொறத்தெரு ஆகிய இடங்களில் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுகிறார்கள்.

கடந்த பக்ரீத் பண்டிகையின்போது அரியமங்கலம், உய்யக்கொண்டான் கரையில் 44 பசு மாடுகளை சட்டவிரோதமாக வெட்டுவதற்காக வைத்திருந்தார்கள். அரசு அதிகாரிகளின் உதவியோடு அந்த மாடுகளை மீட்டோம். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையின்போதும் அரியமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே மெயின் ரோட்டிலேயே 34 மாடுகளை வெட்டுவதற்காக வைத்திருந்தார்கள். அதையும் தடுத்து நிறுத்தினோம்.

காமராஜ் நகர் பகுதியில் இரண்டு சந்துகளில் மாடுகளை வெட்டி விற்பனை செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டரை சூழ்ந்துகொண்டு, 'உங்களிடம் புகார் கொடுத்தவர் யார்? பெயரையும் போட்டோவையும் கொடுங்கள். இதே இடத்தில் வெட்டுகிறோம்' என்று சவால்விட்டார்கள். அப்போது அரியமங்கலம் இன்ஸ்பெக்டராசு இருந்த முத்தரசன் சிறப்பாக செயல்பட்டு எல்லா மாடுகளையும் காப்பாற்றி அரசு காப்பகத்தில் சேர்த்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.

அரியமங்கலம் ஆயில் மில் பகுதியில் கன்றுக்குட்டியின் தலையை வெட்டி சைக்கிளில் வைத்துக்கொண்டு போனார்கள். அதை தடுத்தவரை சுத்தியால் வெட்டப் போனார்கள். இது பெரிய பிரச்னையாகி போலீஸார் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள். மாநகராட்சி பகுதியில் எங்கெங்கே மாடுகள் வெட்டப்படுகின்றன என்பது மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி காவல்துறை அதிகாரிகள் வரைக்கும் தெரியும். ஆனால் மாமூல் வாங்கிக்கொண்டு எதையும் கண்டுகொள்வதில்லை. சுகாதார விதிமுறைகளை மீறி மாடுகளை வெட்டுவது, நோய்வாய்ப்பட்ட மாடுகளை வெட்டுவது. கன்றுக்குட்டிகளை வெட்டுவது என்று சட்டத்தை மீறுகிறார்கள். நோய்வாய்ப்பட்ட மாடுகளின் இறைச்சியை சாப்பிடுபவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. தவிர, மாட்டு இறைச்சியின் கழிவுகளை இஷ்டத்துக்கு பொது இடங்களில் வீசுவிடுகிறார்கள். இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது என்றார்.

நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர். மாடுகளை இறைச்சிக்காக வெட்டக் கூடாது; சாப்பிடக் கூடாது என்கிற உணவு கலாசாரம் விஷயத்துக்குள் எல்லாம் போகவில்லை. அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் மாட்டை இறைச்சிக்காக வெட்டும்போது சுகாதார விதிமுறைகளை பின் பற்றுங்கள்; பொது இடத்தில் பகிரங்கமாக வைத்து வெட்ட வேண்டாம். இறைச்சிக் கழிவுகளை கண்ட இடங்களில் வீச வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

திருச்சியில் மாநகராட்சியின் அனுமதி பெற்ற ஒரேயொரு மாடு வதைக்கூடமான ஜி கார்னர் பகுதியில் 15 வருடங்களாக ஒப்பந்தம் அடிப்படையில் தொழில் நடத்திவரும் சோயிப் அகமதுவிடம் பேசினோம். "நாங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் மாடுகளை வெட்டுகிறோம். மாடு வெட்டும் நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, மாநகராட்சியே அதை பராமரிக்கிறது. திருச்சியில் பல இடங்களிலும் அனுமதியின்றி மாடுகளை வெட்டி ஆங்காங்கே கடைகள் நடத்துவது உண்மைதான்.

மாநகராட்சி போலீஸும்தான் இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் முறையாக கான்ட்ராக்ட் எடுத்து நடத்தும் எனது வருமானமும் பாதிக்கப்படுகிறது. நானும் இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் செய்திருக்கிறேன். அப்போதைக்கு கண்துடைப்பாக ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள். பிறகு வழக்கம் போல் விதிமுறைகள் மீறப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்டவிரோதமாக மாடுகளை வெட்டுவதைப் பற்றி விசாரிக்கப் போன அதிகாரிகளை சுத்தியை எடுத்துக்கொண்டு 'வெட்டுவேன். சோயிப் அகமது குத்துவேன்...' என்று விரட்டிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. திருச்சி தஞ்சாவூர் மெயின் ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட்க்கு நேரெதிரில் கடை வைத்து கடைக்குப் பின்னாலேயே மாடுகளை வெட்டி நான்கு துண்டாக அறுத்து தொங்கவிட்டு விற்கிறார்கள். அங்கேயே ஒரு பள்ளிக்கூடத்துக்கு அருகில் தகரக் கொட்டகை போட்டு மாடு வெட்டுகிறார்கள். அவர்களை யாரும் கேட்க முடியவில்லை. காந்தி மார்க்கெட் பழைய சென்ட்ரல் டாக்கீஸ் பக்கத்தில் வெளிப்படையாக மாட்டை வெட்டி விற்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியம்தான் இதற்கெல்லாம் காரணம்" என்றார்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம் கேட்டபோது, "திருச்சியில் அனுமதி பெற்ற மாடு வதைக்கூடம் ஜி கார்னரில் இருக்கிறது. அங்கே ஓய்வுபெற்ற கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் ஆனந்தராஜன் குழுவினர் மாடுகளை ஆய்வு செய்தபிறகே வெட்டுவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். கன்றுகளும் பசுக்களும் வெட்ட தடை இருப்பதால் அவற்றை வெட்டுவதில்லை. கன்று ஈனாத மாடுகளை வெட்டுவதற்கு வேறு மாநிலங்களில் தடை இல்லை என்றாலும், தமிழகத்தில் அவற்றையும் வெட்டுவதில்லை. அனுமதி பெற்ற மாடு வதைக் கூடம் தவிர வேறு இடங்களில் மாடு வெட்டப்படுவது குறித்து இதுவரை எனக்கு தகவல் இல்லை. நீங்கள்தான் முதல் முறையாக சொல்கிறீர்கள். இதுகுறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.

பாக்ஸ்: 1

மிரட்டிய வியாபாரிகள்!

பீமநகர் மார்சிங் பேட்டை பகுதி கடைகளில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது கண் முன்னாலேயே தெரிந்தது. கடைகளில் எங்குமே கறுப்புக் கண்ணாடி மறைப்புகள் இல்லை. வெட்டப்பட்ட மாடுகளை தெளிவாக தெரியும்படி தொங்கவிட்டுதான் விற்பனை செய்தார்கள். அதை படம் எடுத்ததற்காக வியாபாரிகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொண்டு, 'அனுமதியில்லாமல் நீ எப்படி படமெடுக்கலாம்? அந்தப் படத்தை அழித்தால்தான் உன்னை வெளியே விடுவோம்' என்று நம்மை மிரட்டி உட்காரவைத்தார்கள்.

பின்னர் காவல் துறைக்கு தகவல் சொல்லி அவசர உதவி கேட்ட நிலையில், மூன்று உதவி ஆய்வாளர்கள், அந்தப் பகுதியின் மாநகராட்சி கோட்டத் தலைவர் துர்காதேவி உள்ளிட்டோர் வந்துதான் நம்மை அவர்களிடம் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். கறுப்புக் கண்ணாடி போட்டு மறைத்து வைத்துதான் விற்பனை செய்யவேண்டும் என்கிற விதிமுறைகள் இருந்தும் அவர்கள் வெளிப்படையாக தொங்கவிட்டு விற்பனை செய்வதை பற்றி அக்கறை கொள்ளாத இவர்கள் அனைவருமே, 'அனுமதி கேட்காமல் நீ ஏன் படம் எடுத்தாய்?' என்று நம்மை கேட்டு கடிந்துகொண்டதுதான் அநியாயம்.

பாக்ஸ் 2: 

விதிகள் சொல்வது என்ன?

உணவு தரக்கட்டுப்பாடு சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி லைசென்ஸ், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி ஆகியவை தவிர வெட்டப்படும் கால்நடைகள் எந்த நோயும் இன்றி மனிதர்கள் சாப்பிடத்தக்க வகையில்தான் இருக்கின்றன என்று கால்நடை மருத்துவர் சான்றளிக்க வேண்டும். வெட்டப்படுவதற்கு முன்பாக கால்நடைகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். சுத்தியலால் அடித்து அல்லது மின் அதிர்ச்சி மூலம்தான் உயிரை போக்கவேண்டும். அறுத்து கொல்லக்கூடாது.

உயிர் போன பிறகுதான் அறுக்க வேண்டும். அங்கே பயன்படுத்தப்படும் கத்தி, கொக்கி, செயின் போன்றவை துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனதாக இருக்க வேண்டும். ஓரிடத்திலிருந்து கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது மூடிய வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டு போகவேண்டும். வெட்டிய பிறகும் மருத்துவர் மாநகராட்சி சீல் போடவேண்டும். குடல் உள்ளிட்ட கழிவுகளை முறையாக பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

கழிவுநீர், ரத்தம் போன்றவற்றை முறையாக சுத்திகரிப்பு செய்து அதன் பின்னர்தான் மாநகராட்சி கழிவுநீர் பாதைகளில் சேர்க்க வேண்டும். விற்பனை செய்யும் கடைகள் குடியிருப்புகள் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 50 மீட்டர் தள்ளி இருக்கவேண்டும். வெளியில் தெரியாத அளவுக்கு கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

- ஷானு

Find Us Hereஇங்கே தேடவும்