குவரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - K.ரவி அருணன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

குவரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் -  K.ரவி அருணன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

 இது குறித்து அவர் கூறியதாவது:

”தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனிம வளங்களை  கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு குவாரிகளிலும் அதிக திறன் கொண்ட வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகிறது.

நான்கு அங்குல  அகலம் உள்ள  15க்கும் மேற்பட்ட போர்களை போட்டு   அதில் அதிக திறன் கொண்ட சக்தி வாய்ந்த வெடி பொருட்களை நிரப்பி ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்கின்றனர்.  இதனால் பூமியில் அதிர்வலைகள் ஏற்படுகிறது. இந்த அதிர்வலைகளால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு விவசாயக் கிணறுகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தும் ஆழ்குழாய் கிணறுகள் சரிந்தும் விடுகிறது

 இதனால் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.

மிக அதிக திறன் கொண்ட வெடிமருந்துகள் எவ்வாறு குவாரி உரிமையாளர்களுக்கு கிடைக்கின்றது என்பதை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால்  தமிழகத்தில் தீவிரவாதம் வேரூன்ற வழிவகுக்கும்.

தமிழகத்தில் குவாரிகள் கனிமவள விதிகளை ஒழுங்காக பின்பற்றாமல் கல் எடுப்பதால் 200 அடிக்கு மேல் ஆழமாக தோண்டப்பட்டு பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பல குவாரிகள் அமைந்துள்ளன. ஒப்பந்த காலம் முடிந்தும் செயல்படாத குவாரிகளும் இவ்வாறு திறந்த நிலையில் காணப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாய் உள்ளன.

செயல்படாத குவாரிகளில் தொடர்ந்து சிறுவர்,சிறுமிகள் மாணவ,மாணவிகள் அடிக்கடி பலியாகக் கூடிய செய்தியை செய்தித்தாள்கள் மூலமாக அறிய முடிகின்றது . கடந்த வெள்ளிக்கிழமை கோவில்பட்டியில்  இரு மாணவிகள்  இப்படி குவாரி நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

இவ்வாறு ஆபத்தான குவாரிகளில் மாணவ,மாணவியர்கள் சிறுவர், சிறுமியர் செல்லாதவாறு உடனடியாக தடுப்பு வேலி அமைப்பதற்கு அந்தந்த நில உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு  வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனிமேல் குவாரிகளில் இதுபோல் விபத்து ஏற்பட்டால் குவாரி உரிமையாளர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு  பெரும் இழப்பீடு தொகையை அந்த குவாரி உரிமையாளர் உரிமையாளர்களிடமிருந்தே வசூலித்து கொடுக்க வேண்டும்

குவாரி உரிமம் கொடுக்கும்போது குவாரி அனுமதிக்கப்பட்ட சர்வே நம்பரை சுற்றி ஆட்கள் செல்லாதவாறு உயரமாக வேலி அமைத்தால்தான் குவாரி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதனையும் பரிசீலிக்க வேண்டும். 

மேலும் அனைத்து குவாரிகளுக்கு உரிமம் வழங்கும் போது 5 வருட லைசென்ஸ் கொடுக்கப்படுகிறது அந்த ஐந்து வருட காலத்தில் எந்த அதிகாரிகளும் பணத்தை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட குவாரிகளுக்கு ஆய்வுக்கு செல்வதில்லை. எனவே குவாரி உரிமம் வழங்கும் பொழுது ஒரு வருடத்திற்கு மேல் வழங்கக்கூடாது. இது போன்று விதிமுறைகளை கடுமையாக்கி அதன்மூலம் விபத்துகளையும் விதிமுறைகளையும் தடுக்கலாம் . 

ஆகவே அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”

Find Us Hereஇங்கே தேடவும்