ரூ.700 கோடி மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் தொடர்புடைய அனைத்து அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரூ.700 கோடி மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் தொடர்புடைய அனைத்து அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளரும், ஓபிஎஸ்சிற்கு மிக நெருக்கமானவருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப் பட்டது. பெரியகுளம் ஆர்டிஓவாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ்குமார், அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னப்பிரகாஷ், அதிமுக பிரமுகரின் உறவினர் முத்துவேல்பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணை தாசில்தார் மோகன்ராம், தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன், முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ''இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய அனைத்து அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார். இதையடுத்து நீதிபதி, ''மீதமுள்ள அரசு ஊழியர்கள் 5 பேரை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிசிஐடி தரப்பில் விளக்கமளிக்கவேண்டும்'' என உத்தரவிட்டார்.