உசிலம்பட்டியில் திருமணமாகி 44 நாட்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பட்டறைத் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், கீழப்புதூரைச் சேர்ந்த கோபிகா என்பவருக்கும் கடந்த ஜூன் 1 -ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.
அங்குள்ள பட்டறை தெருவில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், பிரேம் குமார் வழக்கம் போல் தான் செய்யும் வெல்டிங் பணிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த புதுமணப் பெண் கோபிகா, மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், இது குறித்து அக்கம் பக்கத்தினர், பிரேம் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, கோபிகா, வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புது பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 44 நாட்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.