மதுரை மாவட்டத்தில் கல்லூரி வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கல்லூரி வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் தனியார்பிசியோதெரபி கல்லூரி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரிக்கு வெளியில் 30 அடிக்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது என கூறப்படுகிறது. இந்த இடத்தை முன்னால் தனக்கன்குளம் அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் சொந்தம் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் சேர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து இந்த பாதையை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று அறிவிப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அனுப்பியதாக கூறி மூன்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் லாரிகள் மற்றும் ஜேசிபி வாகனத்தை கல்லூரி வாசல் முன்பு நிறுத்தி வைத்து அராஜகம் செய்வதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தை மறித்து வாகனங்களை நிறுத்தி தகராறும் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மது அருந்துவது மற்றும் அங்கு வரும் மாணவிகளை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவிகள் இன்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் ரவி மற்றும் தெற்கு வாசல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் அடிப்படையில் மாணவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். கல்லூரி வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி கல்லூரி மாணவர்கள் திடீர் என்று தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.