10 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை: 3 பெண்கள் கைது

10 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை:  3 பெண்கள் கைது

செங்குன்றத்தில் 10 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாகத் தாய், இடைத்தரகர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுமம் உறுப்பினரான லலிதா(49) என்பவருக்கு சென்னையை சேர்ந்த குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட்டு அந்த குழந்தை ஆந்திராவில் வளர்கிறது என்கிற ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில் ஆந்திர மாநிலம், புத்தூரில் ஆய்வுநடத்தியுள்ளார். அப்போது லலிதாவுக்கு, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய செங்குன்றத்தைச் சேர்ந்த நவநீதம்(69) என்ற பெண் அந்த குழந்தையை அங்கு வளர்த்து வந்தது தெரியவந்ததுள்ளது. 

அக்குழந்தையை மீட்ட லலிதா விசாரணை மேற்கொண்டுள்ளார். அந்த விசாரனையில் சென்னை, கண்ணகி நகர் 23-வது தெருவைச் சேர்ந்த சின்னதுரை- விஜயலட்சுமி(30) என்ற தம்பதியினருக்கு 10 மாதஆண் குழந்தை நித்தின் ராஜ் பிறந்துள்ளார் எனவும் நித்தின் ராஜைவறுமையின் காரணமாக  திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இடைத்தரகரான தங்கம்(42) என்பவரிடம் தாய் விஜயலட்சுமி கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர் எனவும் தெரியவந்தது. 

மேலும்  தொடர் விசாரணையில் அக்குழந்தையை, தங்கம் தன் ஆண் நண்பர் ஒருவர் மூலம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நவநீதத்திடம் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக செங்குன்றம் போலீசார்  வழக்குப் பதிவுசெய்தனர். இதனை தொடர்ந்து குழந்தையின் தாய் விஜயலட்சுமி, தங்கம் மற்றும் நவநீதம் ஆகிய பெண்களை நேற்று ( ஜன. 13 ) கைது செய்ததுடன் தங்கத்தின் ஆண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட அக்குழந்தை சென்னையில் உள்ள் அண்ணாநகரில் அமைந்துள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்