கோவை, சாலையில் நடந்து சென்ற மாணவியின் கன்னத்தில் பிறந்த நாள் கேக் தடவிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டுக்குள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி வந்தனர். அடுத்து ரெஸ்டாரெண்ட், பள்ளி அறை, அலுவலகங்கள், என மாறி, சாலைகளில் கேக் வெட்டி கொண்டாடுவது, அரிவாளால் கேக் வெட்டுவது, தேவையில்லாமல் அவ்வழியே வருவோர் போவோரை வம்புழுக்கு இழுப்பது போன்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன.
அதனையும் தாண்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மாணவியிடம் அத்து மீறிய சம்பவம் அதிர வைத்துள்ளது. கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பத்தன்று இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ’ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி குனியாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். உதவி-ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.