சென்னை: பேருந்து நிழற்குடை விழுந்து விபத்து - 4 பெண்கள் தப்பியது எப்படி?
சென்னை பெசன்ட் நகரில் வண்ணான் துறை பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இன்று மாலை பேருந்துக்காக 6 பயணிகள் காத்திருந்தனர். அப்போது திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை சரிந்து அங்கே அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது.
இதனை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் சிக்கிக் கொண்டிருந்த 4 பெண்களையும் மீட்டனர். பின்னர் காயம் அடைந்த 4 பெண்களையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காயம் அடைந்த பெண்கள் திருவெற்றியூரை சேர்ந்த கோகிலா (69), திருவான்மியூரை சேர்ந்த ஜெயலட்சுமி (40), வியாசர்பாடியை சேர்ந்த முத்துலட்சுமி (49) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த பூங்கொடி (60) என்பது தெரிய வந்தது.
மேலும் இந்த பேருந்து நிலைய நிழற்குடை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வேளச்சேரி எம்.எல்.ஏ-வாக இருந்த அசோக் என்பவரது மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நிழற்குடையை தாங்கியிருந்த இரும்பு துருப்பிடித்து இருந்ததால் சரிந்து விழுந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவ்விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சி.சி.டி.வி பதிவில் நிழற்குடை சரிந்து விழுந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் பதறி அடித்து ஓடி வந்து சிக்கிக்கொண்ட பெண்களை மீட்டதால் எதிர்பாராதவிதமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.