திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் நகர போலீசார் அங்கு சென்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நேதாஜி நகர் பகுதியில் மது பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உஷா (30), ராதிகா (35) மற்றும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (38), வளர்மதி (45) ஆகிய நான்கு பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கர்நாடக மது பாக்கெட்டுகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? இவர்கள் எப்படி கடத்தி வந்தார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.