திருப்பத்தூர்: கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்த 4 போலீசார்? - எஸ்.பி நடவடிக்கை

சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்த 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்
இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார்
இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டாறம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் தாலுகா காவல்நிலைய சிறப்பு எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவாஜி மற்றும் வெண்ணிலா, ஏட்டு வசந்தா மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் கோபி ஆகியோர் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்து கள்ளச்சாராய விற்பனைக்கு உடைந்தையாக இருந்தனர் என்று புகார் எழுந்தது.

இந்த நிலையில், புகாருக்கு உள்ளான திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவாஜி மற்றும் வெண்ணிலா, ஏட்டு வசந்தா மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் கோபி உட்பட 4 பேரை, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது ‘குறிப்பிட்ட 4 பேரும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சவும், விற்பனை செய்யவும் உறுதுணையாக இருந்துள்ளனர். இதற்காக அவர்கள் பணமும் பெற்றுள்ளனர்.

மேலும், மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை மற்றும் ஆல்பர்ட் ஜான் பொறுப்பேற்றதில் இருந்து செய்யும் நடவடிக்கைகள் அனைத்தையும் சாராய வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை களஆய்வு செய்து இவர்கள் 4 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்’ என்றனர்.

இதுகுறித்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில், 'தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர்த்து போலீசார் குறித்து நான் தீவிரமாக விசாரித்து வருகிறேன். விசாரணையில் உண்மைத்தன்மை இருப்பின் கடும் நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பேன்' என தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com