திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்திருக்கும் நான்கு பேர் படுகொலையானது தமிழகத்தை உறைய வைத்துள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் அருகேயுள்ள கள்ளகிணறு கிராமத்தை சேர்ந்தவர் அரிசி வியாபாரி செந்தில்குமார்.
இவருக்கு சொந்தமான நிலம் அவர் வீடு அருகில் உள்ளது. அதை நேற்று மாலை பார்க்க சென்றிருக்கிறார். இவர் சென்றபோது ஒரு கும்பல் அங்கே உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். எதிரே சாய்பாபா கோயிலும் உள்ள நிலையில் கோபமான செந்தில்குமார் அந்த குடிகாரர்களை திட்டியுள்ளார். இதனால் டென்ஷனான அந்த போதை கும்பல் இவரோடு சண்டையிட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் அந்த கும்பல் அரிவாளை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அவரது மரண ஓலம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த அவரது உறவினர்களான மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் ஓடி வந்துள்ளனர். செந்தில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறிக் கூப்பாடு போட்டுள்ளனர்.
உடனே அவர்கள் மீதும் பாய்ந்திருக்கிறது வெறி கொண்ட கொலைகார கும்பல். அந்த மூன்று பேரையும் சரமாரியாக வெட்டி தள்ளியிருக்கின்றனர். ஆக சில நிமிடங்களிலேயே அந்த நிலத்தில் நான்கு உயிர்கள் துள்ளத் துடிக்க குதறப்பட்டன. நான்கு பேரை கொன்ற கும்பல் தங்கள் பைக்குகளை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியது.
இந்த பயங்கர சம்பவம் கள்ளக்கிணறு கிராமத்தை கடும் சோகம் மற்றும் ஆதங்கத்தால் நிரப்பியது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போலீஸின் முதல் நிலை விசாரணையில் சில விபரங்கள் கிடைத்துள்ளன. இதை வைத்து பேசும் போலீஸார் "கொலையாளிகளில் முக்கியமானவர் குட்டி என்கிற வெங்கடேஷன். அவர், முதலில் கொலையான செந்தில்குமாரின் மாஜி டிரைவர். அதனால் இந்த கொலைகளானது அந்த இடத்தில் உட்கார்ந்து மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் நடந்த குரூரமா அல்லது இருவருக்குள்ளும் ஏற்கனவே வேறு முன்பகை உள்ளதா என்பதை விசாரித்து வருகிறோம்.
மீதி மூன்று பேரையும் அவர்கள் கொலை செய்வதற்கான காரணம் என்ன? இந்த குடும்பங்களோடு வேறு ஏதாவது பெரிய பகைகள் உள்ளதா, திட்டமிட்டே இந்த கொலைகளை நடத்தினார்களா? என்றும் விசாரணை நீள்கிறது. ஏனென்றால் கொடூரமான ஆயுதங்களை அவர்கள் கையோடு வைத்திருந்த காரணம் என்ன? ஏற்கனவே கொலை நோக்கில் இருந்ததால் தான் எடுத்து வந்தார்களோ! என்று தோன்றுகிறது. ஒரே நாளில் இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்" என்கிறார்கள்.
இது தொடர்பாக இன்று திருச்சி, மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஷக்தி