கன்னியாகுமரி: அரசு பஸ் மீது சுமோ மோதி 4 பேர் உயிரிழப்பு - 8 பேர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இசைக்கச்சேரி குழுவினர் 12 பேர் நேற்று திருச்செந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதிகாலை அங்கிருந்து சுமோ வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது இவர்களது சுமோ வாகனம் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் டிரைவர் உள்பட தக்கலையை சேர்ந்த கண்ணன் (23), சிஞ்சு (18), அஜித் (25), திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சதீஸ் என 4 பேர் இறந்தனர். மேலும் சுமோ, அரசு பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த சஜிதா (37), அனாமிகா (12), அனந்திகா(18), அஸ்வந்த் (18), எட்வின், நிதிஷ் (18), சஜின் (18), விக்னேஷ் உட்பட 8 பேர் ஆசாரிப்பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமோ வாகனத்தின் டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அரசு பேருந்து மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.