மயிலாடுதுறை: சாலை மறியல் செய்த 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது - என்ன பிரச்னை?

மயிலாடுதுறையில் சாலை மறியல் செய்த 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் கைது
ஊராட்சி மன்ற தலைவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியினை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக ஆன்லைன் டெண்டர்கள் விடுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரியாமலே பணிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்ததும் 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆன்லைன் டெண்டர் பணியை நிறுத்தக்கோரி சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர். அதன்படி 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் புத்தூர் கடைத் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

உடனே விரைந்து வந்த போலீசார் புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான நேதாஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் உமையாள்பதி ஊராட்சி மன்ற தலைவருமான கிள்ளிவளவன், அ.தி.மு.க-வை சேர்ந்தவரும் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவருமான வடிவேல் மற்றும் தி.மு.க-வை சேர்ந்தவரும் முதலைமேடு ஊராட்சி மன்றத் தலைவருமான நெப்போலியன் ஆகிய 4 ஊராட்சி மன்ற தலைவர்களை கைது செய்தனர்.

அப்போது வாகனத்தில் ஏற மறுத்த ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஏற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் அவர்களை கைது செய்ய விடாமல் சாலையில் அமர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் புத்தூர் கடை வீதியில் பரபரப்பு பெரும் ஏற்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக போராடிய கிராம மக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் புத்தூர் கடை வீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

- இரா.உமாரமணன், சீர்காழி   

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com