நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கடைவீதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான சுமதி என்ற மெஸ் உள்ளது. இந்த ஹோட்டலில் அந்த பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினர் வந்து சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம்போல், கடந்த 30 -ம் தேதி பரோட்டாவை பலரும் சாப்பிட்ட நிலையில், சேந்தமங்கலம், ராமநாதபுரம் புதூர், பச்சுடையாம்பட்டி புதூர் காலனி, ஜங்களாபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 38 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்ப'ட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் தீயாக பரவியது.
இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் உமா சம்பந்தப்பட்ட ஹோட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் மாவட்ட உணவு துறை அதிகாரிகளும் களம் இறங்கி ஹோட்டலை ஆய்வு செய்தனர். மேலும், சேந்தமங்கலம் கடைவீதியில் இயங்கி வந்த மளிகைக் கடை உணவுப்பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்ட 6 கடைகளுக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தரமற்ற உணவு வழங்கிய சுமதி மெஸ் ஹோட்டலுக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது.