நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஆணை

நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து 2 வார காலத்துக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செம்மஞ்சேரியில் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து புதிதாக காவல் நிலையம் கட்டப்படுவதாகவும், உடனடியாக கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 2 ஐஐடி பேராசிரியர்கள் கொண்ட குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.  

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாணைக்கு வந்தபோது, நீர்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல்நிலையம் கட்டப்பட்டிருப்பதாகவும், இதேபோல் தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் ஐஐடி பேராசிரியர்கள் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை மற்றும் அதனை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்