வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகிறது
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகிறது
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், சின்னையன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் காலவாசல், பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் கனமழை பெய்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மையம் தகவல் தெரிவித்துள்ளது.