லைக் செய்து ஷேர் செய்தால் பணம் தருவதாக பல லட்சம் மோசடி
இணையதளத்தில் வீடியோக்களை லைக் செய்து ஷேர் செய்தால் பணம் தருவதாக பல லட்சம் மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாச்சலம் நகரை சேர்ந்தவர் தினேஷ். வேலை இல்லாத சூழலில் நண்பர் சுந்தர் என்பவர் ShareMe என்ற செயலியை லிங்க் மூலம் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. ரூ.30 ஆயிரம் செலுத்தி செயலியில் வரக்கூடிய வீடியோக்களை லைக் செய்து லைக் செய்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டால் ஒரு பதிவுக்கு ரூ.18 வீதம் நாளொன்றுக்கு ரூ.1800 வரை சம்பாதிக்கலாம் என்ற சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி தினேஷ் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகிய இருவரும், செயலியில் வரக்கூடிய வீடியோக்களை லைக் பதிவிட்டு வந்துள்ளனர். திடீரென்று செயலி செயல்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல், ShareMe செயலி மூலம் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
பணத்தை இழந்த பலரும், சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். சென்னை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில், சையத் பக்ரூதின், மீரான் மொய்தின், முகமத் மானஸ் ஆகியோரை கைது செய்தனர்.
வீடியோவை லைக் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை ஷேர் செய்தால் மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது