ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலையில் பல சிக்கல்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர், அவர்களை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக கூறிவிட்டார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆணை பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கடிதம் எழுதினார். அவர் கடிதம் எழுதி ஒருமாதம் ஆகிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எழுவர் விடுதலை செய்வதில் பல சட்டசிக்கல்கள் உள்ளது. எழுவர் விடுதலையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரை கட்டாயப்படுத்த முடியாது.
நீட் தேர்வை ஆராய அமைக்கப்பட்ட குழு நீதிமன்றத்துக்கு எதிராக உருவாக்கப்படவில்லை. விடுதலை செய்யக் கோரியவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்" என்றார்.