அடக்கம் செய்ய முயன்றபோது உயிருடன் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பலி.
தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி. 6 மாதகால கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரோக்கிய மேரிக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி அரசு மருத்துவமனை ஊழியர்கள், மூடி போட்ட வாலியில் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
தம்பதியர் அந்த குழந்தையை சொந்த ஊரில் மையானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்றபோது, குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர், குழந்தையை தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று காலை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. 700 கிராம் மட்டுமே இருந்ததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.
பிறக்கும்போதே குழந்தை இறந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 2 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.