பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் என்ற ஊரில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி மீனவ சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஏரியில் பொதுமக்கள் மீன்பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதையறிந்த மீனவ சங்கத்தினர், மீன்பிடி திருவிழா நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் மீன்பிடி திருவிழா நடத்தும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்த சூழலில் நேற்று பெரிய ஏரியில் மீன்பிடிக்க இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அரும்பாவூர் ,கடம்பூர் ,பொன்னம்மா துறை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெரிய ஏரி பகுதியில் மீன் பிடிக்க வரத்தொடங்கினர். இதனால் மீனவர் சங்கத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் 6 இரு சக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.அதுமட்டுமல்லாமல் பலர் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தகைதாரர்கள் அளித்த புகாரில் 14, மீன் பிடித்தவர்கள் புகாரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.