புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் புதுக்கோட்டையிலுள்ள அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு துண்டிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சிலையை உடைத்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலை அமைந்துள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பெரியார் சிலை உடைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையை காலிகள் சிதைத்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அமைதியைக் குலைக்கும் விதத்தில் ஈடுபட்ட நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தயவுதாட்சண்யமின்றி, இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.