சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசின் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கியது
சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசின் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கியது.
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எட்டு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமைலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலத்தை அடையும்படி அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த சாலை அமைந்தால் 2.15 மணி நேரத்தில் சென்னை -சேலம் பயணம் அமையும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தால் ஏராளமான் விவசாய நிலங்கள், வீடுகள், மரங்கள் பாதிக்கப்படும் என பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந் நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில்ம் தற்போது நில அளவீடு பணிகள் மட்டும் நடப்பதாகவும், வனத்துறை அமைச்சகம் அனுமதித்தபிறகே நிலம் கையகப்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இறுதி வாதங்கள் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், எட்டு வழிச்சாலைக்கான அரசின் அறிவிப்பை ரத்து செய்தும், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும் அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இந்த வழக்கை தொடுத்தபோது அன்புமணி எதிர்க்கட்சியாக இருந்தார். ஆனால் இன்று மத்திய மாநில ஆளும்கட்சிகளின் கூட்டணியில் இணைந்து தருமபுரி வேட்பாளராகவும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.