தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துவிட்டனர்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான கருப்பு பூஞ்சை நோய் கண்டறிதல் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருப்பு பூஞ்சை நோய் கண்டறிதல் தொடர்பாக வெளிப்புற நோயாளிகள் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளையும், பல்துறை மருத்துவ வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விரைவாக சிகிச்சை மேற்கொள்ள இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக தொடக்க நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் என பல துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இந்தப் பிரிவில் இடம்பெறுகிறார்கள். இங்கு சிகிச்சை பெற 120 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவும் காரணத்தை கண்டறிய 13 மருத்துவ வல்லுநர்கள் குழு ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது. ஓமந்தூரார் மருத்துவமனையிலும் இதற்கான பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கருப்பு பூஞ்சை நோயால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.