பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்
தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு முடிவுற்ற பின்னர், பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவிட் 2வது அலை பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ். எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது. எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது.
கோவிட்-19 தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும், இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.