புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு எண்ணெய் மருந்து தருவதாகக் கூறி மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மனைவி 40 வயதான செல்வி. இவரது இ-மெயில் முகவரிக்கு வந்த வசீகரமான அறிவிப்பில் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான எண்ணெய் மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும், ஒரு லிட்டர் விலை ரூ1 லட்சத்து 30 ஆயிரம் என்றும், அதனை வாங்கி டீலராக விற்பனை செய்தால் விற்பனை செய்பவர்களுக்குப் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை நம்பி குறுஞ்செய்தியில் வந்த மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசிய மர்ம நபர் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வி பல தவணைகளாக மொத்தம் ரூ.32 லட்சத்து 80 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பி பல நாட்கள் கடந்த பிறகும் மருந்து கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கடலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மற்றொரு பண மோசடி வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒக்ரி குட்வில் சினாசா(32), உக்சிஞான் இமேகா(47) குட்வின் இமானுவேல்(42), எபோசி உச்சானா ஸ்டான்லி(42) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம், கார்கார் பகுதியைச் சேர்ந்த இவர்கள் செல்வியிடம் பணத்தை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.