இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென தொடர்பை இழந்ததால் அதனை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கேஆர்ஐ நங்கலா 402 என்ற நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போது திடீரென்று எந்த சிக்னலும் இல்லாமல் காணாமல் போயுள்ளது. அந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 53 பேர் இருந்துள்ளனர். காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் மலேசியா தங்களது கப்பல்களை அனுப்பி உள்ளது. மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர். ஜெர்மனியில் கட்டப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை(21-04-2021) அதிகாலை 4.30 மணி அளவில் தொடர்பு இழந்துவிட்டதாகவும் நீர்முழ்கி கப்பலை தேட கடற்படை போர்க் கப்பல்களை அனுப்பி உள்ளது என்றும் கடற்படை செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பலில் 72 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதால் அதில் உள்ள 53 பேரின் கதி என்ன என்ற ஐயம் எழுந்துள்ளது.