கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் குண்டியல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா (40). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டியல்நத்தம் வனப்பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.
அம்பிகா மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது மகள் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பர்கூர் போலீசார் அம்பிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பர்கூர் டி.எஸ்.பி மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணையின்போது, அம்பிகாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் உடைந்த நிலையில் கிடந்துள்ளது.
போலீசார் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடன் அம்பிகா கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து பர்கூர் போலீசார் ஏழுமலையை பிடித்து, கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ஏழுமலையும், அம்பிகாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
அப்போது ஏழுமலை அம்பிகாவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை ஏழுமலை தனது நண்பர்கள் கோவிந்தராஜ், 17 வயது சிறுவன் ஆகியோருடன் தனியாக இருந்தால் பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதற்கு அம்பிகா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை குண்டியல்நத்தம் வனப்பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி அங்கு வந்தபோது அம்பிகாவுடன் ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
வெகுநேரம் கழித்து அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டபோது அம்பிகா பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ‘பணம் இல்லை’ என கூறியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் அம்பிகா அதிர்ச்சி அடைந்து ஏழுமலையின் செல்போனை பறித்துக் கொண்டு பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை பெற்றுக் கொள்ளுமாறு, கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அம்பிகாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அம்பிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் அம்பிகாவின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிந்தது. இதன் பிறகு தலைமறைவாக இருந்த ஏழுமலையின் நண்பர்கள் ராகுல், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.