செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வென்னியப்பன். இவரது மனைவி சந்திரா. இருவரும் கடந்த 13 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.
பெருங்கரணை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி அஞ்சலி மற்றும் மாமியார் வசந்தா. இவர்கள் 3 பேர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்த நிலையில் சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். அஞ்சலி ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (60) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனை அடுத்து இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40), ஜம்பு (60), முத்து (64) ஆகிய 3 பேர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சி காண்போர் மனதை கலங்கச் செய்யும் விதமாக இருந்தது.
- டில்லிபாபு, செங்கல்பட்டு