கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி. இங்குள்ள மங்காக் குளத்தெருவில் சுமார் 4 லட்சம் லிட்டர் நீர்த்தேக்கக் கொள்ளளவு கொண்ட தொட்டி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் தொட்டியில் இருக்கும் தேன் கூட்டை கலைத்து தேனை எடுக்க முயற்சி செய்ததாகவும், அதற்காக சுமார் 1 மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த சென்ற பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், மர்ம நபர்கள் குறித்த விபரங்களைச் சேகரித்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த நபர்கள் நீர்த்தேக்கத் தொட்டியில் வேறு ஏதேனும் கலந்திருக்கலாம் என, சந்தேகித்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வண்ணம் அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்த 3 லட்சம் லிட்டர் தண்ணீரை பேரூராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர்.
இதையடுத்து அந்த நீர்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் அந்த குடிநீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- கோபிகா ஸ்ரீ