விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு விபத்து நடந்த இடம்
பட்டாசு விபத்து நடந்த இடம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஊராம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

சுமார் 20க்கு மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த இருளாயி (48), குமரேசன் (30), அய்யம்மாள் (54), சுந்தர்ராஜ் (27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வெப்பம் காரணமாக மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதன் பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு பார்சல்களில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். பின்னர் பட்டாசு விபத்தில் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிறிது நேரத்திலேயே குமரேசன், சுந்தர்ராஜ் மற்றும் அய்யம்மாள் ஆகிய 3 தொழிலாளர்களும் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இருளாயிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருளாயிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com