கடலூர்: விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி பின்னணி

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்

கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணியளவில், வீட்டில் செப்டிக் டேங்க்-இல் அமைக்கப்பட்டு இருந்த சென்டரிங் பலகைகளை பிரிக்கும் பணி நடந்துள்ளது.

இந்த பணியில் கட்டிட கொத்தனார்கள் பாலசந்தர், சக்திவேல் மற்றும் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது கட்டிட கொத்தனார் பாலசந்தர் (32) என்பவர் திடீரென விஷ வாயு தாக்கியதில் மயங்கி உள்ளே விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மற்றும் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாலசந்தரை காப்பாற்றும் வகையில் உள்ளே இறங்கியுள்ளனர். இதில் 3 பேரையும் விஷ வாயு தாக்கியதில் செப்டிக் டேங்க் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளனர்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். உடனே உறவினர்கள் ஓடி வந்து பார்த்து, கதறி அழுதனர். தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து 3 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஶ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 3 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த தகவலறிந்து கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் நேரில் வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- ஸ்ரீமுஷ்ணம் பொய்யாமொழி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com