நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 50, 100, 200 ரூபாய் நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்ததோடு, கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய ஸ்கேன் மெஷின், கம்யூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம், தென்னம்புலம், வடமழை, மணக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் தற்போது திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதற்கென திறக்கப்பட்ட சாலையோர திருவிழா கடைகளில் கள்ளநோட்டுகள் அதிகம் புழங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வேதாரண்யம் டி.எஸ்.பி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் மணக்காட்டில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் 200 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கிய நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், அரிய கவுண்டர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, வேதையன், கோவிந்தசாமி ஆகியோரது மகன்கள் கள்ள நோட்டை புழக்கத்தில்விட்டது தெரிய வந்தது.
அந்த 3 பேரையும் போலீசார் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 200 ரூபாய் நோட்டுகள் 87ம், மற்றும் 100, 50, 20 ரூபாய் நோட்டுகளும், இதற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் மெஷின், கம்யூட்டர், ஜெராக்ஸ் எடுக்க பயன்படுத்தப்பட்ட டோனர் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கத்தரிபுலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் ஸ்கேன் செய்து, அதனை கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில்விட்டது தெரியவந்தது.
போலீசார் இதுகுறித்து சிறுவர்களிடம் கேட்டதற்கு, ‘2000 ரூபாய் தயாரிக்கலாம் என்று இருந்தோம். அதற்குள் மோடி 2000 ரூபாய் செல்லாது என சொல்லிவிட்டார்.
மேலும் 2000 ரூபாய் என்றால் எல்லோருக்கும் சந்தேகம் வந்து எளிதில் மாட்டிக்கொள்வோம். அதனால்தான் 20, 50, 100, 200 என மக்கள் அதிகம் பயன்படுத்தும் நோட்டுகளை தயாரித்தோம்’ எனக்கூறி அதிரவைத்துள்ளனர்.
இதையடுத்து 3 சிறுவர்களையும் கைது செய்த கரியாப்பட்டினம் போலீசார் அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
இதுகுறித்து நாகை மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் கூறுகையில், ‘இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சிறுவர்களின் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் மாவட்டத்தில் எங்கேயாவது யாராவது ஈடுபட்டால் உடனே தகவல் தெரிவிக்க கூறியுள்ளேன்.
இதற்காக எனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளேன். தகவல் தருபவரின் ரகசியம் நிச்சயம் பாதுகாக்கப்படும்’ என்றார்.
- ஆர்.விவேக் ஆனந்தன்