தாய், மகன் கொலை: என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

சீர்காழியில் தாய், மகனை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் தன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் தருமகுளத்தில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி ஆஷா, மகன் அக்கீல், மருமகள் நெக்கில் ஆகிய 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
தன்ராஜ் வீட்டுக்குள் இன்று (ஜன.27) மர்ம நபர்கள் நுழைந்ததால், சப்தம் போட்ட தன்ராஜின் மனைவி ஆஷா மற்றும் மகன் அக்கீல் ஆகியோரை அவர்கள் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். மேலும், தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நெக்கிலையும் கொள்ளையர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
தன்ராஜ் வீட்டில் லாக்கரை திறந்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்த காரையும் எடுத்துக்கொண்டு 3 கொள்ளையர்களும் தப்பிச்சென்றுள்ளனர்.
மொத்தம் ரூ.6 கோடி மதிப்பிலான 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நெக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் செல்லாமல், கிராமப்புற சாலை வழியாக கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, கொள்ளையர்கள் சென்ற கார் பழுதாகியுள்ளது. எருக்கூர் சாலையில் காரை நிறுத்தி விட்டு வயல் வழியாக நகையுடன் 3 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் அந்த நகைகளை வயலிலேயே நகைகளை புதைத்து வைத்துள்ளனர்.
இதனிடையே, வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், வயலில் நடந்து சென்ற 3 நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பிச் சென்றுவிட்டார். அப்போது, அவரை பிடிக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனீஷ்(30), ரமேஷ்(25), சுட்டுக்கொல்லப்பட்டவன் மகிபால்(24) என்பது தெரியவந்தது. இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை