மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டது. சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மீனவர்களிடம் பேசினோம். "சுருக்குமடி வலையால் கடலில் உள்ள ஒட்டுமொத்த மீன் வளமும் அழிந்து போகிறது. இதன் காரணமாக, அரசும் சுருக்குமடி வலைகளால் மீன் பிடிக்க தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
சுருக்கு மடி வலை பிரச்சனை மீனவர்கள் இடையே ஒற்றுமையை குலைத்து பெரும் மோதலை ஏற்படுத்தி வருகிறது. அரசும் இந்த பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
அரசு இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
மீனவர்கள் போராட்டம் காரணமாக, 4,000 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 300 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ஆர்.விவேக் ஆனந்தன்