காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை..!

காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை..!
காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி ஒட்டர் திண்ணை பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவர், பிக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் புதுமண தம்பதி, ஒரு மாதம் மட்டும் குடும்பம் நடத்தியுள்ளனர். இதையடுத்து, ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். விஜய், பெங்களூருக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த விஜய் நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் இரவு மாமனார் வீட்டிலேயே விஜய் தங்கி இருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.
ஆனால், நேற்று காலை பாலக்கோடு அருகே உள்ள காடுசெட்டிப்பட்டி-பஞ்சப்பள்ளி சாலையில் பாரூரான்கொட்டாய் என்ற இடத்தில் உடலில் பலத்த காயங்களுடன் இளைஞர் இறந்துகிடப்பதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இளைஞரின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்தது விஜய் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாமனார் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்