கொரோனா மருத்துவ கழிவுகள்.. குரங்குகள் இழுத்துச் செல்லும் அவலம்!
உதகையில் திறந்த வெளியில் கொட்டி கிடக்கும் மருத்துவ பாதுகாப்பு கவச உடைகளை (பிபிஇ கிட்) குரங்குகள் இழுத்துச் சென்று விளையாடும் வீடியோ வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில், தனியார் பள்ளி ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை அலட்சியமாக திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளன. இவற்றை குரங்குகள் வாயில் கடித்து இழுத்துச் சென்று விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதனால் குரங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மருத்துவ கழிவுகளை முறையாக கையாள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தும், அதனை பின்பற்றாமல் திறந்து வெளியிலேயே மருத்துவ கழிவுகள் கிடப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.