தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பறிமுதல்.. இருவர் கைது
சென்னையில் 500க்கும் மேற்பட்ட பட்டங்கள், மாஞ்சா நூலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னையில் பட்டம் விடுதல், மாஞ்சா நூல் விற்பனைக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைந்தகரை பகுதியில் சிலர் பட்டம் விடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பட்டம் விட்டவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், விருகம்பாக்கம் பகுதியில் பட்டம் மற்றும் நூல் வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
விருகம்பாக்கம் பூபதி தெருவில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது, 3 பெட்டிகளில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூலை பறிமுதல் செய்த போலீசார் ஷாஜஹான், தமீம் அன்சாரி ஆகியோரை கைது செய்தனர்.