காக்களூர் டாஸ்மாக் கிடங்கில் இடமில்லை.. நீண்ட வரிசையில் நிற்கும் மதுபான லாரிகள்!
காக்களூர் டாஸ்மாக் கிடங்கில் மதுபான பெட்டிகளை வைக்க இடம் இல்லாததால், மதுபானங்களை ஏற்றிக்கொண்டு, கிடங்குக்கு வந்த ஏராளமான லாரிகள், கடந்த சில நாட்களாக சாலையின் இருபுறமும் பாதுகாப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்துள்ள காக்களூர் சிட்கோ பகுதியில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம், கிடங்கு வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு மதுபானங்களை கிடங்கில் இருப்பு வைத்து, டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஏராளமான லாரிகள், வழக்கம் போல காக்களூர் டாஸ்மாக் கிடங்கில் மதுபான வகைகளை இறக்கி வைக்க வந்தது. ஆனால் கிடங்கில் சரக்குகளை வைக்க போதிய இடமில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக கிடங்கின் வெளியே உள்ள சாலையில் இருபுறமும் நீண்ட வரிசையில் பாதுகாப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறுகையில், "ஊரடங்கு நேரத்தில் கடந்த சில நாட்களாக போதிய உணவு கூட கிடைக்காமல், சரக்குகளை இறக்கி வைக்க காத்துக்கிடக்கிறோம். அனுமதி வழங்கினால் இறக்கி விட்டு சென்று விடுவோம். குறிப்பிட்ட அளவு பாரத்துக்கு மேல் லாரிகளில் சரக்குகள் ஏற்றி, லாரிகளை நிறுத்தி வைத்தால் லாரிகள் சேதமடையும். எனவே, லாரிகளை விரைந்து அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.