பட்டாசு ஆலை விபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பட்டாசு விபத்து
பட்டாசு விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் ரோல் கேப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் ரோல் கேப் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பட்டாசு மருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மண்குண்டாம்பட்டியை சேர்ந்த பானு என்ற பாலசரஸ்வதி (39) மற்றும் விஸ்வநத்தத்தை சேர்ந்த முருகலட்சுமி (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்ட ஆலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளதோடு, உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com