பள்ளி விடுமுறையில் புதிய அரசு கல்லூரியின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 2 மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஹரீஷ்குமார் (15). விருதுநகரிலுள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து அடுத்ததாக 10ம் வகுப்பு செல்ல இருந்தார்.
அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ரவிச்செல்வம் (17). நரிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆகையால்,விடுமுறையைப் பயன்படுத்தி வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க நினைத்த இருவரும் திருச்சுழி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலைக்கல்லூரியின் கட்டடத்தில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
அங்கு சென்ட்ரிங் வேலையில் இருவரும் ஈடுப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக சென்ட்ரிங் கட்டிடத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ரவிசெல்வம், ஹரீஸ்குமார் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தனர். தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அவர்களது உடல்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவர்கள் இருவர் இறந்தது எம்.புளியங்குளம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.