தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வீட்டின் அருகாமையில் இருந்த ஏரியில் மூழ்கி 2 பள்ளி சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பரில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் நவம்பர் டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை உள் மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களிலும் அதிக மழைப்பொழிவு தருகிறது. நடப்பாண்டு தமிழக மற்றும் கர்நாடகாவில் மே மாதத்தில் தொடங்கிய பருவ மழை தொடர்ந்து நான்கு மாதமாக நீடித்தது தொடர் மழை காரணமாக ஏரிகுளம் குட்டை அணைகள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 60 சதவீதம் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்த நிலையில் நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் நீச்சல் பழகவும், குளிக்கவும் செல்கின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது தம்மனம்பட்டி கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் கனகசபாபதி(45). இவருடைய மகள்கள் சஞ்சனா(7) அருகிலுள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். மோனிகா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். மகன் தமிழ் இனியன் (3) வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை நாளாக இருந்ததினால் இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். இதனால் நேற்று மதியம் வீட்டின் அருகாமையில் இருந்த தம்மனம்பட்டி ஏரி அருகே மூன்று குழந்தைகளும் சிறிய மிதிவண்டியில் சென்றுள்ளனர். அப்பொழுது தம்பியை ஏரி கரை மீது அமர வைத்துவிட்டு இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே ஏரியில் இறங்கி உள்ளனர்.
அப்போது சஞ்சனா ஏரியில் இருந்த தண்ணீரில் இறங்கிய போது புதைசேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதாகவும், அதனைப் பார்த்த தங்கை மோனிகா காப்பாற்ற முயற்சி செய்தபோது இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த கனகசபாபதி வீட்டின் அருகே சுற்றி பார்த்துவிட்டு ஏரி அருகே வந்துள்ளார். அப்போது ஏரிக்கரை மீது சைக்கிள் இருப்பதைக்கண்டு சந்தேகம் ஏற்பட்டு தண்ணீரில் இறங்கி பார்த்தபோது இரண்டு பெண் குழந்தைகளும் சடலமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் இரண்டு குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பொய்கை கோ.கிருஷ்ணா