சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர், சரித்திரப்பதிவேடு குற்றவாளி. கஞ்சா வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வந்துள்ளார்.
இதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு தெற்கு நுழைவாயில் அருகே தனது நண்பர் சந்தோஷ் என்பவரோடு யுவராஜ் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பதுக்கி வைத்து இருந்த பட்டாக்கத்தியை எடுத்துக் கொண்டு யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை வெட்டுவதற்காக பாய்ந்து வந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவராஜ் மற்றும் சந்தோஷ் அலறியடித்துக் கொண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஓடி பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தஞ்சம் புகுந்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் அதிரடியாக களத்தில் குதித்தபோது உடனே பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம கும்பல் தப்பிச்சென்றது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரித்திரப்பதிவேடு ரவுடி குள்ளகார்த்திக் என்பவர் முன்பகையின் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து யுவராஜ் மற்றும் சந்தோஷ் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. எனவே அவர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- மேனகா அஜய்