கள்ளக்குறிச்சி: வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி - சிக்கிய இருவர்

என்.எல்.சி-யில் வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மங்களம்பேட்டை அடுத்த காட்டு நெமிலி பகுதியை சேர்ந்தவர் மணிசேகர். இவரது மகன் ஹரிஹரன் (32). அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

இவரது மாமனார் ராமதாஸ் கடந்த 2019ம் ஆண்டு என்.எல்.சி-யில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரிடம் நண்பராக பழகி காண்ட்ராக்டில் வேலை செய்து வந்த கடலூர் மாவட்டம், நெய்வேலி ஜோதி நகரைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் கமலநாதன் என்.எல்.சி-யில் காண்ட்ராக்ட் வேலைகள் அதிகமாக உள்ளது எனவும் பணம் இருந்தால், தன்னால் வேலை வாங்கித் தர முடியும் என்றும் ஹரிஹரன் மாமனார் ராமதாசிடம் ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய ராமதாஸ் தனக்கும், மகள் கமலிக்கும் நெய்வேலி என்.எல்.சி-யில் வேலை வாங்கித் தருமாறு கமல்நாதன் மற்றும் அவரது நண்பர் விருத்தாசலம் காப்பான்குளத்தை சேர்ந்த சிவராமன் மகன் ராயப்பிள்ளை என்பவரிடம் முதற்கட்டமாக 4 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆனால் கமலநாதன் கூறியபடி வேலை வாங்கி தராமல் ராமதாஸ் மற்றும் அவரது மகள் கமலியை அலைக்கழித்து வந்துள்ளார். இதுகுறித்து ஹரிஹரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கமல்நாதன் மற்றும் ராயப்பிள்ளை இருவரையும் தனிப்பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, ராமதாஸ் மட்டும் இல்லாமல் மேலும் 20 பேரிடம் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

மோசடி செய்த பணத்தை ஆடம்பர செலவு மற்றும் குடும்ப செலவு செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com