கள்ளச்சாராயம்: செங்கல்பட்டு திரும்பிய மாமியார், மருமகன் உயிரிழப்பு - மகள் கவலைக்கிடம்

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் செங்கல்பட்டு திரும்பிய மாமியார், மருமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் செங்கல்பட்டு மாமியார், மருமகன்
விழுப்புரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் செங்கல்பட்டு மாமியார், மருமகன்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மீனவர் கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றுள்ளார்.

அவரிடம் இருந்து சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் சாராயம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அடுத்து உள்ள காலப்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிறிது நேரத்தில் சங்கர் மற்றும் தரணிவேலு சுருண்டு விழ உடனே அவர்களும் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் ஊர் முழுவதும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மீதமுள்ள 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மலர்வழி (60) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பரபரப்பும், பதற்றமும் அடங்குவதற்கு முன்பே விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கிச் சென்று குடித்த செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மேலும், இருவர் உயிரிழந்த தகவல் வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது.

செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் பெருக்கரணை இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சின்னதம்பி (30). இவரது மனைவி அஞ்சலி ( 22). தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

இவர்களுடன் சின்னத்தம்பியின் மாமியார் வசந்தா வசித்து வருகிறார். மகள், மருமகன் மற்றும் மாமியார் 3 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கூலி வேலைக்கு சென்று வரும் இவர்கள் வேலை முடிந்த பிறகு 3 பேரும் சேர்ந்து குடிப்பதை வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வேலை நிமித்தமாக மரக்காணம் வரை சென்ற இவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து குடித்துள்ளனர்.

இதில் போதை ஏறிய நிலையில் சின்னதம்பி மற்றும் அவரது மாமியார் வசந்தா ஆகியோர் மயங்கி விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர். அஞ்சலி கவலைக்கிடமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்து சித்தாமூர் காவல்துறையினர் விரைந்து அஞ்சலியை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உயிரிழந்த வசந்தா மற்றும் சின்னத்தம்பி உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com